அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு. தி.மு.க., அமைச்சருக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா?அண்ணாமலை

பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை தொடர்பான நிகழ்வுகளில், ஹிந்து மத விரோதமாகச் செயல்படும் அமைப்புகளைக் கண்டித்தும், பாரபட்சமாகச் செயல்படும் தி.மு.க., அரசைக் கண்டித்தும், ஆலயத்தின் புனிதத்தைக் காக்க இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க, மதுரை மாவட்டம் முழுவதும் திமுக அரசு 144 தடைவிதித்துள்ளது.
ஆனால், தமிழகம் முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல, பா.ஜ., விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் ஜி. பாண்டுரங்கன், கோயம்புத்தூர் நகர மாவட்டத் தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் கு. சரவணகிருஷ்ணன், சேலம் நகர மாவட்டத் தலைவர் T.V. சசிக்குமார், மற்றும் பா.ஜ., சகோதரர்கள் என பலரையும் கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்தும், ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது தி.மு.க., அரசு.
அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு. தி.மு.க., அமைச்சருக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் துணைசெல்வதை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.