கனமழைக்கு பயந்து வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள்- அபராதம் விதித்த போலீசார்..!

தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் (அக்டோபர் 16) மற்றும் 17 ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாளை முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது.
சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் பலரும் கார்களை நிறுத்தி வருகின்றனர். மழைக் காலங்களில் தாழ்வான பகுதியான வேளச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும்.
கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் இருபுறத்திலும் கார்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. மதியம் ஒருபுறம் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இருபுறமும் கார்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறது. சுமார் 250 க்கும் மேற்பட்ட கார்கள் வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
பாலத்தில் அதிகளவில் வாகனங்களை நிறுத்தி வருவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வேளச்சேரி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியும் மக்கள் மேம்பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்தி உள்ளனர். வேளச்சேரி - பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ள கார்களின் பதிவு எண்களை போக்குவரத்து போலீசார் குறித்துச் சென்றுள்ளனர். பாலத்தின் மீது பார்க்கிங் செய்யப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது எனவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.