செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்!
ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவை செம்மொழி பூங்கா வளாகத்தின் அருகில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுவதற்கான அடிக்கல்லை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்ட உள்ளார்.
அதற்கு முன்பு இந்த பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்ய அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் இன்று அங்கு வந்தனர். அவர்களிடம் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அங்கு நடைபெற்ற வரும் பணிகளைப் பற்றி விளக்கினர்.
செம்மொழிப் பூங்கா திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினர். 165 ஏக்கர் நிலத்தில் அமையும் இந்த பூங்கா மொத்தம் 2 கட்டங்களாக கட்டப்படுகிறது; முதல் கட்டம் - 45 ஏக்கர், இரண்டாம் கட்டம் - 120 ஏக்கர்.
முதல் கட்டத்தில் 25 ஏக்கருக்கு மகரந்த வனம், நக்ஷத்திர வனம், மூலிகை வனம் என மொத்தம் 23 வித்தியாசமான பூங்காக்கள் இடம்பெறுகின்றன. மீதம் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் 1000 சதுர அடியில் உலக தரம் கொண்ட பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், 300 கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி, செயற்கை நீரூற்று என மற்றும் சில கட்டமைப்புகள் உருவாகின்றன.
மாநாட்டு மையம் மற்றும் திறந்தவெளி அரங்க கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. 23 வகை பூங்காக்கள் கட்டுமான பணிகள் நிறைவடையும் போது தயாராக இருக்கவேண்டும் என்பதற்காக அதற்கான மரக்கன்றுகள் வாங்கிட ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் மற்றும் பூங்கா பராமரிப்புக்கு தேவை படும் நீரை உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வழங்க ரூ.8 கோடி மதிப்பில் பூங்காவிற்கும் அந்த நிலையத்திற்கும் இடையே குழாய்கள் அமைக்கும் பணியை மாநகராட்சி நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில் இன்று கோவை வந்த அமைச்சர் நேரு இந்த திட்டப்பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று குறிக்கோள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதாகவும் இன்னும் 4 மாத காலங்கள் இருப்பதால் அதற்குள் முடிக்க வேண்டும் என்று பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்புகையில், அதற்கு முதலமைச்சர் அது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவார் எனவும் இது குறித்து இன்று மதியம் தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.