அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என அறிவிப்பு..!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பணியாற்றினார். இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ் உடன் 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் டிரம்ப் பாலியல் உறவு கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஸ்டோமி டெனியல்ஸ் இந்த விவகாரத்தை வெளியே கூறி விடக்கூடாது என்பதற்காக 2016-ம் ஆண்டு அவருக்கு பணத்தை கொடுத்து டிரம்ப் சமரசம் செய்துள்ளார். தேர்தல் நிதியாக குடியரசு கட்சியில் ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து டிரம்ப் போலியான வணிக பதிவுகளை உருவாகியுள்ளார்.
இதன் பின்னர் தனது முன்னாள் வழக்கறிஞரான மைக்கெல் கோஹன் மூலம் ஸ்டோமி டெனியல்சுக்கு அந்த பணத்தில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை டொனால்டு டிரம்ப் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் 2018-ம் ஆண்டு வால் ஸ்டிரிட் ஜெர்னல் செய்தி நிறுவனம் நடத்திய ரகசிய ஆய்வில் தெரியவந்தது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு திரட்டப்பட்ட பணத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து ஸ்டோமி டெனியல்சுக்கு டிரம்ப் பணம் கொடுத்தது தெரியவந்தது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் டிரம்பிற்கு எதிராக பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், பண மோசடி வழக்கில் டிரம்ப் குற்றவாளி என மன்ஹாட்டன் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. பணமோசடி உள்பட 34 பிரிவுகளில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இதை தொடர்ந்து டிரம்பிற்கு அடுத்த மாதம் 11-ம் தேதி தண்டனை வழங்கப்பட உள்ளது.
பணமோசடி வழக்கில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம். அதே வேளை, குறைந்தபட்ச தண்டனையும் வழங்கப்படலாம். தண்டனை நீதிபதியின் முடிவுக்கு உட்பட்டதாகும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக டிரம்ப் விரைவில் அறிக்கப்பட உள்ளார். இந்த சூழ்நிலையில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்துள்ள நிகழ்வு அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.