வயநாடு பகுதியில் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து..!
வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட இரு பெரும் நிலச்சரிவுகள் நாட்டையே உலுக்கியுள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வந்த முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி, பூஞ்சேரிமட்டம், அட்டமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் மொத்தமாக மண்ணில் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இன்று 9வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உறவுகளை இழந்ததோடு, வாழ்நாள் முழுக்க உழைத்துக் கட்டிய வீடுகளை இழந்துள்ளனர். இனி எங்குச் செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர்களிடம் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று கேரள மாநில மின் துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக 10 குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.