1. Home
  2. தமிழ்நாடு

"நீங்கள் நலமா" திட்டம் தொடக்கம்..! பயனாளர்களிடம் தொலைபேசியில் கருத்துகளை கேட்டறிந்தார் முதல்வர்..!

1

"நீங்கள் நலமா" என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின் பயனாளார்களிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

அதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாள்தோறும் பார்த்துப் பார்த்து எத்தனையோ முத்திரைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அப்படியொரு திட்டம்தான் 'நீங்கள் நலமா?' என்ற புதிய திட்டம். புதிய திட்டத்தின் இந்தத் தலைப்பே, மக்களின் மீதான எங்களது கனிவான சிந்தனையை, அன்பான அக்கறையைக் காட்டும். தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் எனபதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மையான நோக்கம்.

மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் உங்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த "நீங்கள் நலமா" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன். நமது திராவிட மாடல் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களால் பலன் அடையாதவரே இல்லை. நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னைச் சந்திக்கும் மக்கள் முகங்களில் பார்க்கும் மகிழ்ச்சியில் திட்டங்களின் வெற்றியைக் காண்கிறேன்.

ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான மனுக்கள் என்னைத் தேடித் தேடி வழங்கப்பட்டன. அப்படி வழங்கப்பட்ட கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றிக் கொடுத்த காரணத்தால் இப்போது நான் செல்லும் பயணங்களில் மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை; மாறாக, அவர்களது முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பேரறிஞர் அண்ணா அவர்கள், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!" என்றாரே, அதனைத்தான் இப்போது மக்களின் முகங்களில் காண்கிறேன்.

அந்த மகிழ்ச்சியை மேலும் உறுதிசெய்ய இப்போது துவங்கப்பட்டுள்ளதுதான், "நீங்கள் நலமா?" என்ற திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை நான் தொடங்கி வைத்து ஒரு சில பயனாளிகளிடம் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது உளம் மகிழ்ந்தேன். ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் அரசாகக் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

அதேபோல அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து உங்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கோட்டையில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டி அறிவிப்பதோடு எனது கடமை முடிந்து விட்டதாக நான் எப்போதும் நினைப்பது இல்லை. ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்.

உங்கள் ஒவ்வொருவர் நலமே எனது நலம்; திராவிட மாடல் அரசின் நலம்; தாய்த்திருத் தமிழ்நாட்டின் நலம். அந்த நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன. உங்கள் அரசு என்றும் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி அளிக்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like