1. Home
  2. ஆன்மீகம்

கணவனின் ஆயுள் காக்கும் காரடையான் நோன்பு..!

1

ஒவ்வொரு மாதங்களிலும் மேற்கொள்ளப்படும் பண்டிகைகளும், விரதங்களும் வாழ்க்கைக்குத் தேவையான நியதிகளையே ஆன்மிகத்தின் வாயிலாக நமக்கு உணர்த்துகின்றன. இந்த பாரம்பரியமிக்க விரதங்களின் வரிசையில் வருவது தான் காரடையான் நோன்பு. மாசி மாதத்தின் முடிவில் பங்குனி மாதம் பிறக்கும் போது தங்கள் கணவரின் ஆயுள் நீண்டு தாங்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக வாழவேண்டும் என்ற வேண்டுதலுடன் சாவித்திரி அம்மனை வழிபடும் விரதமே, காரடையான் நோன்பு ஆகும். இந்த நோன்பு வந்ததின் வரலாறைப் பார்ப்போம்.

மந்திர தேசத்தின் மன்னன் அஸ்வபதி நீண்ட காலமாக புத்திரப்பேறு இன்றி இறைவனை வேண்டி பல யாகங்கள், பூஜைகள், தவங்களை நிகழ்த்தினான். அதன் பலனாக இறைவன் அருளால் அழகிய பெண் குழந்தை பிறக்க, மகிழ்ந்த அரசன் அந்த குழந்தைக்கு சாவித்திரி என்று பெயரிட்டான். அக்குழந்தைக்கு சகல வித்தைகளையும் கற்றுத்தந்து சகலகலாவல்லி ஆக்கியதுடன், அவளை பண்புள்ள பெண்ணாகவும், கடவுளின் மீது அளவற்ற பக்தி கொண்டவளாகவும் வளர்த்தான்.
சாவித்திரி திருமண வயதை எட்டினாள். தன் ஆசை மகளின் மணாளனை அறிந்து கொள்ளும் ஆவலில், ஒரு நாள் அரண்மனைக்கு வந்த நாரத முனிவரிடம், தன் மகளின் மணவாழ்க்கை பற்றி கேட்டான் மன்னன்.

அதற்கு நாதரர், ‘கண் பார்வையை இழந்த பெற்றோரை பேணிக் காத்து, அவர்களையே தெய்வமாக எண்ணி சேவை செய்து வரும் குணவானான சத்தியவான் என்பவனைத் தான் சாவித்திரி விரும்பி மணப்பாள். ஆனால் சத்தியவான் அற்ப ஆயுளில் மரணிப்பது விதி’ என்றார்.

நாதரர் சொன்னபடியே நடந்தது. ஒரு நாள் காட்டுப் பகுதிக்குள் பூப்பறிக்கச் சென்ற சாவித்திரி, சத்திய வானைக் கண்டு அவனை விரும்பினாள். மன்னனும் விதியை மாற்ற இயலாது என்பதை உணர்ந்து, சத்தியவானையே தன் மகளுக்கு மணம் முடித்து வைத்தான்.

பகைவர்களால் கண்கள் பிடுங்கப்பட்டு, நாட்டினின்று காட்டுக்கு விரட்டப்பட்ட சாலுவ தேசத்து அரசன் துயுமுத்சேனனின் மகன் தான் சத்தியவான். காட்டில் குடிசை அமைத்து பெற்றோருடனும், காதல் மனைவி சாவித்திரியுடனும் மகிழ்வுடன் வாழத் தொடங்கினான். காட்டில் உள்ள மரங்களை வெட்டி ஜீவனம் நடத்தி வந்தான், சத்தியவான்.

வருடம் சென்றது. நாரதர் கூறிய ரகசியமான சத்தியவானின் ஆயுள் முடியும் காலம் வந்தது. தன் பதிவிரதத் தன்மையால் கணவனின் ஆபத்தை உணர்ந்த சாவித்திரி, அவனுடனே இருக்கப் பிரியப்பட்டாள். அது ஒரு மாசி மாதத்தின் கடைசி நாள். கணவனே கண் கண்ட தெய்வமாகவும், அவனைப் பெற்றவர்களுக்கு செய்யும் தொண்டையே கடவுளுக்கு செய்யும் சேவையாகவும் எண்ணி வாழ்ந்து வந்த குணவதியான சாவித்திரி, காட்டிற்கு மரம் வெட்டப் புறப்பட்ட கணவனுடன் தானும் வருவதாகக் கூறி புறப்பட்டுச் சென்றாள்.

சத்தியவான் மரத்தை வெட்டி விறகுகளாக்க, அருகில் சாவித்திரியோ வரும் ஆபத்தை எதிர்நோக்கி முழுமையான இறை தியானத்தில் ஆழ்ந்திருந்தாள். மதிய வேளை வந்தது. உணவு உண்ட சத்தியவான் களைப்பில் மனைவியின் மடியில் தலை வைத்து உறங்க, உறக்கத்திலேயே அவனின் உயிரைக் கவர்ந்து, தன் கையில் இருந்த கயிற்றில் ஐக்கியமாக்கினான் எமன்.

தியானத்திலிருந்த சாவித்திரி கணவனின் உடலினின்று வெளிப்பட்ட ஒளி, எமனின் கைகளில் இருந்த கயிற்றில் ஐக்கியமானதை அறிந்து கண் விழித்தாள். தவ வலிமையால் எதிரில் நின்ற எமனைக் காணும் சக்தியைப் பெற்றிருந்தாள், அவள். எமனை வணங்கினாள். தன்னை வணங்கும் அந்தப் பெண்ணை வாழ்த்தும் நோக்கில், ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று வாழ்த்திய எமதர்மன், சத்தியவானின் உயிரோடு எமலோகம் நோக்கிச் சென்றான்.

கணவனின் உடலை பத்திரப்படுத்திய சாவித்திரியும், இறைவனை வேண்டியபடி எமனைப் பின் தொடர்ந்தாள். கற்புக்கரசிகளின் தவ வலிமை எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டது என்பதை தன் பூத உடலுடன் எமனைப் பின் தொடர்ந்த சாவித்திரி நிரூபித்தாள்.

‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று வாழ்த்தியது உண்மையானால், தன் கணவரின் உயிரைத் திரும்பித் தரும்படி அவள் எமதர்மனிடம் வேண்டினாள். அவளது பதியின் மேல் கொண்ட பக்தியையும், விடா முயற்சியையும், புத்தி சாதுர்யத்தையும் கண்டு வியந்த எமதர்மன், ‘மங்கையே! உன் பதிபக்தியைக் கண்டு மெச்சுகிறேன். ஆனாலும் நான் என் கடமையில் இருந்து தவற முடியாது. ஆகவே உன் கணவனின் உயிரைத் தவிர வேறு வரங்களைக் கேள் தருகிறேன்’ என்றார்.

சாவித்திரி மிகுந்த சாதுர்யத்துடன் ‘தீர்க்கசுமங்கலி பவ என்று என்னை வாழ்த்தி அருளிய எமதர்மனே, நான் என் கற்புநிலை பிறழாமல் நூறு பிள்ளைகளைப் பெற்று மகிழவேண்டும். என் மாமனார், மாமியார் இருவரும் அதனைக் கண்டு மகிழ வேண்டும்’ என்று வேண்ட, அவளின் கோரிக்கையில் மறைந்து இருந்த அர்த்தம் புரிந்த எமன் அவளைப் பாராட்டியபடி அவளின் வேண்டுதலுக்கிணங்கி கற்புநிலை பிறழாமல் (பிற ஆடவனின் துணையின்றி) நூறு பிள்ளைகள் பெற ஏதுவாக அவளின் கணவன் உயிரைத்தந்து வாழ்த்தியதாக புராண வரலாறு கூறுகிறது.

இதையடுத்து உறக்கத்தில் இருந்து விழித்தவனைப் போல், உயிருடன் எழுந்த சத்தியவானுடன் இல்லம் நோக்கிச் சென்ற சாவித்திரி, அங்கு தன் மாமனார், மாமியாரின் கண்கள் திரும்ப வரப் பெற்றதைக் கண்டு எமதர்மனுக்கு மனதார நன்றி கூறினாள்.

தன் கணவனின் உயிரைத் திரும்பித் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, அப்போது வீட்டில் இருந்த கார் அரிசியையும், காராமணியையும் அரைத்து மாவாக்கி இனிப்பு அடையும், கார அடையும் செய்து, அதனுடன் அன்று கடைந்த உருகாத வெண்ணெய்யையும் சேர்த்து தூய நுனி வாழை இலையில் படைத்து இறைவனை வழிபட்டாள். பின் அந்த பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்களுக்கு அளித்து மகிழ்ந்தாள்.

இந்தப் புராண நிகழ்வு நிகழ்ந்தது மாசி மாதத்தின் கடைசி நாள். எமனைப் பின்தொடர்ந்து சென்று கணவன் உயிரை மீட்டு வந்தபோது, மாலைப்பொழுது முடிந்து இருள் சூழ்ந்து விட்டது. எனவே அது பங்குனி மாதம் பிறக்கத் தொடங்கிய நேரம். இரு மாதமும் கூடும் நேரம். மேலும் சாவித்திரி, எமனுடன் சென்று கணவன் உயிரை மீட்டு வர மூன்றே முக்கால் நாழிகை நேரம் (ஒன்றரை மணி நேரம் ) ஆனதென்றும், அதனால் தான் என்றும் ஒருவரின் இறப்பு நிகழ்ந்து ஒன்றரை மணி நேரம் கழித்தே மற்ற காரியங்களைத் தொடங்குவதாகவும் ஐதீகம் உள்ளது. இறந்தவரின் உடல் சூடு அந்நேரம் வரை இருப்பது நாம் அறிந்ததே.

பொதுவாக இறைவனின் பெயர்கள் லட்சுமி நாராயணன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று பெண்களுக்கு முன்னுரிமை தந்து அதன் பின்தான் இருக்கும். ஆனால் சாவித்திரி தன் காதல் கணவனின் மேல் கொண்ட அளவற்ற பக்தியால் எமனிடமே வாதிட்டு வெற்றி கொண்டு “சத்தியவான் சாவித்திரி” என்று புகழப்படுவது சிறப்பு. சாவித்திரியின் கற்பும், கணவன் மீதும் அவன் வீட்டார் மீதும் அவள் கொண்டிருந்த பக்தியும், எதற்கும் கலங்காத எமதர்மனையே அசைத்து விதியைப் புறந்தள்ள வைத்தது. இதே போல் எத்தனை இடர்கள் வந்தாலும், தங்கள் கணவரின் உயிருக்கு ஆபத்து வராமலும், தங்களை விட்டுப் பிரியாமலும் நீடுழி வாழவே சாவித்திரியின் வழியில் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டு அம்மன் அருளைப் பெற்று மகிழ்கின்றனர்.

#ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி

சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி

சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி

மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி

சர்வாபீஷ்ட சாதய சாதய

சம்பத்தோ ப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய

அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு

Trending News

Latest News

You May Like