உத்தரபிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..!
இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று விபத்தில் சிக்கியிருக்கிறது. அதாவது, அகமதாபாத்திலிருந்து, வாரணாசிக்கு செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை ஜான்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தபோது தடம்புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்திருக்கிறது.
இந்த விபத்தில் 20 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றாலும் கூட, இந்த பாதையில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் தண்டவாளத்தில் பாறாங்கல் இருந்தது என்றும், அதில் மோதியதால்தான் ரயில் தடம் புரண்டது எனவும் தெரிய வந்திருக்கிறது.
விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், "விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை, பெரிய அளவில் காயமும் ஏற்படவில்லை. எனவே பயணிகளை மீட்டு அடுத்த ரயில் நிலையத்திற்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு, அவர்கள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.