அட கடவுளே! எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த மாதம் 5ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும் விரைவில் குணமாகி வீடு திரும்பி விடுவேன் என்றும் வீடியோவில் பேசி இருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் சிகிச்சை அளித்தனர்.
நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் விழிப்புடன் இருக்கிறார் என்றும் பேசுவதை புரிந்து கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
51 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் திடீரென்று மோசம் அடைந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Health bulletin on Thiru S P Balasubrahmanyam, as on September 24 2020, 6:30 PM IST#MGMHealthcare #SPBalasubrahmanyam pic.twitter.com/fLAAtH074h
— MGMHealthcare (@MGMHealthcare) September 24, 2020
“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு எக்மோ உள்ளிட்ட இதர உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசம் அடைந்தது. இதையடுத்து அவருக்கு அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.