1. Home
  2. தமிழ்நாடு

கடன் தொல்லையால் மனைவி, மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த வெள்ளி பட்டறை அதிபர்!

1

சேலத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 46). வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி ரேகா (40). இந்தத் தம்பதியின் மகள் ஜனனி (17). ஒரே மகள் ஆவார். இவர் சேலம் அழகாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் பால்ராஜ் தான் வசித்து வந்த இடத்தில் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கி புதியதாக 2 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி வீடு கட்டினார்.

மேலும் மனைவியும் தனியாகக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வீட்டில் வெள்ளிப்பட்டறை வைத்துத் தொழில் செய்து வந்தார். இதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு குடும்ப செலவுக்கும், கடன் தொகைக்கும் செலவழித்து வந்தார்.

இதனிடையே அவருக்குத் தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கடன் தொகையை மாதந்தோறும் செலுத்த முடியாமல் தாமதமானது.

கடன் தொகையைக் குறிப்பிட்ட நாளில் சரியாகக் கட்டாததால் கடன் தொகை, அபராத வட்டியுடன் சேர்த்து பல மடங்கு அதிகமானது.

இதனால் கணவன்-மனைவி இருவரும் செய்வதறியாது தவித்தனர். இதனிடையே கடன் தொகையைத் திரும்பிக் கேட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டது. தினமும் குடும்பத்தினர் மன வேதனையில் தவித்தனர்.

நேற்றும் வங்கியைச் சேர்ந்தவர்கள் வீட்டுக்கு வந்து கடன் தொகை கேட்டுச் சத்தம் போட்டனர். அப்போது நாளை (இன்று) கடனைக் கொடுக்க வேண்டும் எனச் சொல்லியுள்ளனர்.

இந்த நிலையில் வங்கியில் கடன் செலுத்த பணம் இல்லாததால் மன வேதனை அடைந்த பால்ராஜ் இரவு உயிரைவிட முடிவு எடுத்தார். நேற்று இரவு பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகிய 3 பேரும் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின் விசிறிக் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் உறவினர் சந்தேகம் அடைந்தார். உறவினரின் மகள் வழக்கம்போல் பள்ளிக்கு ஜனனியுடன் செல்வார்.

இதனால் ஜனனியை பள்ளிக்குக் கூப்பிட வேண்டி உறவினர் மகள் அவருடைய வீட்டுக்குச் சென்றார். அங்குக் கதவு திறந்து கிடந்தது. வீட்டின் அறையில் பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகிய 3 பேரும் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் வீட்டின் முன்பு திரண்டு கதறி அழுதனர்.

இதுபற்றித் தகவல் அறிந்த சேலம் மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனர் கீதா மற்றும் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்ட கணவன்-மனைவி, மகள் ஆகிய 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அறையில் கடிதம் இருக்கிறாதா? எனச் சோதனை நடத்தினர். இதில் ஒரு உருக்கமான கடிதம் சிக்கியது. பால்ராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் உள்ள தகவலைப் போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். அதில் கடன் தொடர்பாகப் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் கணவன்-மனைவி, மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like