அப்பா பாடல்கள் இருக்கும் வரை.. எங்களோடு இருப்பார்.. SBP சரண் உருக்கம்!

உடல் நிலை தேறி வந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்.
கடந்த மாதம் 5ம் தேதி கொரோனா தொற்று காரணமாக எஸ்.பி.பி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு உடல் நிலை நன்றாக இருந்தது. ஆனால் நாட்கள் ஆக ஆக நோயின் தீவிரம் தெரியத் தொடங்கியது.
இந்நிலையில் திரைத்துறையினர், பிரபலங்கள், மக்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அவர் பாடிய பாடலை ஒலிக்கவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். வைரஸ் பாதிப்பு தீவிரமடைய தொடங்கியதை அடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவர்கள் எக்மோ சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக தொடங்கியது.
இந்நிலையில் அவர் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. வியாழக்கிழமை (24.09.20) அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சைக்கு எஸ்.பி.பி.யின் உடல் ஒத்துழைக்காததால் அவர் உயிரிழந்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில், RIP SPB என மருத்துவமனையில் இருந்தபடியே சோகமாக தெரிவித்துளார். இதனால் நாடு முழுவதும் அவர் ரசிகர்கள், திரைத்துறையினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலகோடி ரசிகர்களின் பிரார்த்தனை பலனளிக்காத சோகத்தில் ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அப்பாவின் பாடல்கள் இருக்கும் வரை.. அப்பா எங்களோடு இருப்பார்.. என்று எஸ்.பி.பி.யின் மகன் சரண் சோகமாக தெரிவித்தார். மருத்துவமனை வாசலில் நூற்றுக்கணக்கான ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.