இதை தெரிஞ்சிக்கோங்க..! சர்க்கரை நோய் இருந்தால் பால் குடிக்கலாமா..?
பாலில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாலில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களான புரோட்டீன், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்றவை ஏராளமான அளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்துமே சர்க்கரை நோயை நிர்வகிக்க உதவுகின்றன. ஆய்வுளானது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிப்பதன் மூலம், பாலின் பிற நன்மைகளைப் பெறலாம் என்று கூறுகின்றன. மேலும் ஒவ்வொருவருக்கும் இரத்த சர்க்கரை அளவானது வேறுபடும். எனவே பால் குடித்த பின் அவர்களது இரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்து, அதன் பின் குடிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவெடுக்கலாம்.
இருப்பினும் பால் சர்க்கரை நோயை உண்டாக்கும் அல்லது சர்க்கரை நோயை மோசமாக்கும் என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. சொல்லப்போனால் உண்மையில் பால் டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரும். எனவே சர்க்கரை நோயாளிகள் பாலை முழுமையாக தவிர்க்கக்கூடாது.
பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகளவில் உள்ளன. இவை எலும்புகளின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான சத்தாகும். இருப்பினும், பாலில் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் அளவுக்கு அதிகமாக பாலை அருந்தக்கூடாது. கொழுப்பு நிறைந்த ஒரு பெரிய டம்ளர் பாலில் 150 கிலோரிகள் உள்ளன. அதே சமயம் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் 80 கலோரிகளே உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை உண்ணும் போது, அது இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள் கொழுப்பு நிறைந்த பாலுக்கு பதிலாக, பாதாம் பால், சோயா பால் போன்ற பிற வகையான பாலை தங்களின் உணவில் சேர்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு பாலை குடிக்கலாம்?
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் பாலைக் குடிக்கலாம். ஒரு டம்ளருக்கு மேல் குடித்தால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென அதிகரித்து, உடலில் எதிர்பாராத பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். மேலும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சனை உள்ள சர்க்கரை நோயாளிகள் பாலை அறவே தவிர்க்க வேண்டும்.
பாலில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் சிறந்த வகையான பாலைத் தேர்வு செய்து குடிக்க வேண்டியது அவசியம். ஆய்வுகளானது கொழுப்பு குறைவான அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாக கூறுகின்றன. கொழுப்புள்ள முழு பாலில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் கலோரிகள் போன்றவை அதிகமாக உள்ளன. எனவே சர்க்கரை நோயாளிகள் மற்றும் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது சிறந்த தேர்வல்ல.