“கூட்டணிக்காக சலாம் போட மாட்டேன்” – அண்ணாமலை பரபரப்பு பேச்சு!!
கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு சலாம் போட மாட்டேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என்று பேசியதாக கூறப்படுகிறது. தனியாக இருந்தால்தான் கட்சியை வளர்க்க முடியும் என்று அவர் பேசியதாகவும் தெரிகிறது.
மேலும், கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன், கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன், திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, கூட்டணி கட்சிகளான அதிமுக – பாஜக இடையே பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் தற்போது அண்ணாமலை இவ்வாறு பேசியுள்ளதாக வெளியாகி உள்ள தகவல், இரு கட்சிகளுக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றால் மகிழ்ச்சி என்கிற வகையில் அவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
newstm.in