‘உழைக்கும் மக்களின் தோழர்’ என்.சங்கரய்யா காலமானார்..!
இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் திரு. என்.சங்கரய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
என்.சங்கரய்யா பற்றி ஒரு சிறிய பார்வை :
70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் மாணவராக, கட்சித்தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, விவசாய சங்க மாநில, அகில இந்தியத் தலைவராக பல சேவைகளையாற்றி வருபவரும், சுதந்திரப் போராட்ட வீரர், என்.சங்கரய்யா காலமானார்.
என்.சங்கரய்யா கோவில்பட்டியில் பிறந்தவர். தூத்துக்குடியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்றார். பாரதியார் கவிதை கள் இவருக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கின. புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல போராட்டங்களிலும் பங்கேற்றார்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைதானார். கல்லூரிப் படிப்பும் முடிவுக்கு வந்தது. மகன் வழக்கறிஞராக வேண்டும் என்ற இவரது தந்தையின் ஆசையும் நிறைவேறவில்லை.
வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டத் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். போலீஸாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை, சிறைத் தண்டனை என போராட்ட வாழ்க்கை நடத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.1967, 1977, 1980 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மொத்தம் 11 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார்.
எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார், கதராடையே அணிந்து வருபவர். கம்யூனிஸ்ட் கட்சியில் பல பொறுப்புகளை வகித்து, அவற்றில் திறம்பட செயலாற்றி ஓய்வுபெற்ற பின்னரும்கூட, கட்சி அலுவலகத்துக்கு வருவது, ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தார்.