வைரலாகும் வீடியோ..!! உயிருடன் சமாதி நிலையை அடைய முயன்ற இளைஞரை மீட்ட போலீசார்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தில் சாது ஒருவர் உயிருடன் சமாதி நிலையை அடைய போவதாக கூறி, மண்ணுக்குள் தன்னை புதைத்துக்கொண்டார். இதை அறிந்த போலீசார் மண்ணைத் தோண்டி அந்த சாதுவை மீட்டனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், போலீசாருக்கு இந்த சமாதி குறித்து தகவல் அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் மதரீதியான பழக்கத்தை ஒரு சாது செய்கிறார், இது தற்கொலை செய்வதற்கு சமம் என்று அந்த பத்திரிகையாளர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அசிவான் போலீசார் சம்பவ இடமான தேஜ்பூர் கிராமத்துக்குச் விரைந்தனர். அங்கு கூடியிருந்த பல சாதுக்கள் சேர்ந்து, 22 வயதான சாதுவை குழிக்குள் இறக்கி, மண்ணைப் போட்டு மூடி யாகம் செய்து கொண்டிருந்தனர். இதைப் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் யாகத்தை தடுத்து நிறுத்தி, குழியைத் தோண்டி, குழிக்குள் படுத்திருந்த 22 வயது சாதுவை உயிருடன் மீட்டனர்.
இதுகுறித்து அசிவான் காவல் நிலைய அதிகாரி அனுராக் சிங் கூறும்போது, "தேஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிலரும், பத்திரிகையாளர் ஒருவரும், இளைஞர் ஒருவர் உயிருடன் சமாதியாக முயல்கிறார். உடனே தடுத்து நிறுத்துங்கள் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, தேஜ்பூர் கிராமத்தில் சாதுக்கள் பூஜை செய்த இடத்துக்கு சென்று அங்கு குழிக்குள் இருந்த இளைஞரை உயிருடன் மீட்டோம். அவர் பெயர் சுபவ் எம் குமார்.
அந்த இடத்தில் இருந்த மற்ற சாதுக்களும், குமாரின் நண்பர்களுமான ராகுல் மற்ற இருவரையும் கைது செய்துள்ளோம். இவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கும், சுபவ் குமார் மீது தற்கொலைக்கு முயன்ற வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.