வெட்கமற்றவர்கள், ஏதோ நிகழ்ச்சிக்கு தயாராகின்றனர்: எதிர்க் கட்சிகள் விமர்சனம்..!
மோர்பி நகர் கேபிள் பாலம் விபத்தில் காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மருத்துவமனை பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக அவசர அவசரமாக தயாராவதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் விமர்சித்துள்ளன.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கேபிள் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மோர்பி நகருக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்.
இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மோர்பி நகருக்கு சென்று, ஆய்வு செய்கிறார். இதற்காக குஜராத், ராஜஸ்தானில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தனது பல்வேறு பயணத் திட்டங்களை ரத்து செய்துள்ளார்.
இந்நிலையில், மோர்பி நகர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று சந்தித்து நலம் விசாரிக்கிறார். பிரதமர் மோடி வருவதை ஒட்டி அங்குள்ள மருத்துவமனை அவசர அவசரமாக புதுப்பிக்கப்படுகிறது.
மருத்துவமனையின் இடிபாடுகளை சரிசெய்து, கழிவறைகளை மாற்றியமைத்து, வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி நடந்து துரிதமாக நடந்து வருகிறது. நேற்று தொடங்கி இரவு முழுவதும் இந்த பணிகள் விறு விறுவென நடைபெற்றன.
இதனை சுட்டிக்காட்டி, 'பாலம் இடிந்து விழுந்த விபத்தில் நிறைய மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவர்களோ ஏதோ நிகழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கமற்றவர்கள்' என்று காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.