வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது..!!
புதிய நிதி ஆண்டான ஏப்ரல் 1-ம் தேதியையொட்டி நேற்று முதல் பல்வேறு புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்.சி.எஸ்.எஸ்.) முதியவர்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு முன்பு அதிகபட்ச வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. அது நேற்று முதல் ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
தபால் அலுவலகத்தில் நேற்று முதல் ரூ.1000 செலுத்தினால் ரூ.67,750 பெறக்கூடிய திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான வட்டி 7.1 சதவீதம் ஆகும். இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் நேற்று முதல் பான் கார்டு முடக்கப்படும். மேலும் அவர்களுக்கு வரி பிடித்தமானது (டி.டி.எஸ்.) அதிகபட்ச அளவான 20 சதவீதமாக நிர்ணயிக்கப்படும்.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை கடந்த 313 நாட்களாக உயராமல் உள்ளது. அடுத்த நிதி ஆண் டு நேற்று தொடங்கி உள்ள நிலையில் புதிய நிதி ஆண்டில் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளது. அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை நேற்று முதல் 12.12 சதவீதம் உயருகிறது. வலி நிவாரணிகள், தொற்று நோய் தடுப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரிக்கிறது.
அரிய நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கு இறக்குமதி வரி விலக்கு நேற்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அரிய மருந்துகளின் விலை குறைகிறது. மத்திய அரசு ஊழியராக இருப்பவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யலாமா? பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை அவகாசம் உள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.217 சம்பளம் வழங்கப்படுகிறது. இது ரூ.229 ஆக உயருகிறது. வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வருகிறது. ஆண்டு சம்பளம் ரூ.7 லட்சத்துக்கு மேல் பெறுபவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கிறது.
ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான சம்பளத்துக்கு 5 சதவீதம் வரி, ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரைக்கும் 10 சதவீதம் வரி, ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரைக்கும் 15 சதவீதம் வரி. ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரைக்கும் 20 சதவீதம் வரி, ரூ.15 லட்சத்துக்கும் மேல் உள்ள வர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது. ஸ்டேட் வங்கி புதிய வட்டி 7.90 சதவீதம் முதல் தொடங்குகிறது. எச்.டி.எப்.சி. வங்கி வட்டி 8.30 சதவீதம் முதல் தொடங்குகிறது. மற்ற வங்கிகளும் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளன. மாசு இல்லாத பி.எஸ்.-6 தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதால் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் விலை உயரும்.
நிறுவனங்கள் நேற்று முதல் தங்கள் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை நிர்வகிக்க பயன்படுத்தும் மென்பொருளில் ஆடிட் டிரையல் எனப்படும் தணிக்கை சோதனை வசதியை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். அரசு சாரா ஊழியர்கள் ஓய்வு பெறும்போது விருப்ப பணப்பட்டுவாடா மீதான வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயருகிறது. ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தின் மூலம் கிடைக்கும் இரண்டு பிரீமியமான ரூ.5 லட்சத்துக்கு வரி விதிக்கப்படும். மேற்கண்ட நடைமுறைகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்தன.