1. Home
  2. தமிழ்நாடு

வாடகைதாரர்கள் ஆதாரை மின் இணைப்புடன் இணைப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள் தயக்கம்.. ஏன் தெரியுமா ?

வாடகைதாரர்கள் ஆதாரை மின் இணைப்புடன் இணைப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள் தயக்கம்.. ஏன் தெரியுமா ?

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியானது கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள் இவர்களில் யார் வேண்டுமானாலும் ஒருவர் ஆதார் எண்ணை இணைக்க முடியும். வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டண அட்டையுடன் தங்களின் ஆதார் அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்று இணைக்க வேண்டும். சென்னையில் 180-க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்படுகிறது.

இந்த நிலையில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் இணைப்புடன் தங்களின் ஆதார் எண்ணை இணைத்த பிறகு வீடு மாறி செல்லும் நிலையில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமோ என்ற குழப்பம் வாடகை தாரர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் வீடு மாறி வேறு வீட்டுக்கு குடியேறும் போது அந்த வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணை மீண்டும் பதிவு செய்ய முடியும். இதேபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வீட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

அவர்கள் இந்தியாவில் உள்ள தங்களின் ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அந்த வீட்டில் வசிப்பவர்கள் அல்லது உறவினர்களின் ஆதார் எண்ணை இணைத்து மின் கட்டணம் செலுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மின் கட்டணம் செலுத்துவதற்காக வாடகைக்கு குடியிருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் வீட்டு உரிமையாளர்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் வாடகைதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்படுமோ? வாடகைதாரர்கள் அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடினால் எதிர்காலத்தில் ஏதாவது சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதனால் வாடகை தாரர்கள் ஆதாரை இணைப்பதற்கு பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். வாடகைதாரர்களின் ஆதார் இணைப்பு மூலம் வீட்டு உரிமையாளர்கள் தங்களின் உரிமைகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகளிடையே மீண்டும் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் பொது மக்களுக்கு உள்ளன.


வாடகைதாரர்கள் ஆதாரை மின் இணைப்புடன் இணைப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள் தயக்கம்.. ஏன் தெரியுமா ?



ஆனால் அந்த சந்தேகங்களை யாரிடம் கேட்டு நிவர்த்தி செய்வது என்று அவர்களுக்கு தெரிய வில்லை. முகாம்களில் உள்ள ஊழியர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் சரியாக பதில் சொல்ல தெரிய வில்லை. இதற்கிடையே பொது மக்களின் கேள்விக்கு இணையதளத்தில் பதில் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் கேள்விகளை கேட்டு பதில் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like