1. Home
  2. தமிழ்நாடு

வந்தே பாரத் ரெயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

வந்தே பாரத் ரெயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

புதுடெல்லி - போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி போபாலில் நேற்று கொடி அசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ''இந்த வந்தே பாரத் சேவையை தொடங்கிவைக்கும் நாள் ஏப்ரல் 1 என என்னிடம் தெரிவிக்கப்பட்டபோது, ஒரு விஷயத்தை நான் உறுதியாக நினைத்தேன். இதுகுறித்த செய்தி வெளியாகும்போது நிச்சயம் இது பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் ஃபூல் (April Fool) என எனது காங்கிரஸ் நண்பர்கள் கூறுவார்கள் என்பதுதான் அது. ஆனால், நீங்களே தற்போது பார்க்கிறீர்கள். ஏப்ரல் 1-ம் தேதி திட்டமிட்டபடி வந்தே பாரத் ரயில் சேவை கொடி அசைத்து துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இது நிபுணத்துவத்துக்கும் நம்பிக்கைக்குமான அடையாளம்.

இதற்கு முன்பு இருந்த அரசுகள் வாக்கு வங்கிக்காக தாஜா செய்யும் அரசியலில்தான் கவனம் செலுத்தின. மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் அவர்கள் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் ஒரு குடும்பத்தையே முதல் குடும்பமாகக் கருதினார்கள். இரண்டாவது, மூன்றாவது குடும்பங்கள் பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. அவர்களாகவே அதில் இருந்து விலகிவிட்டார்கள்.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியன் ரயில்வே அவல நிலையில் இருந்தது. குறைகளை தெரிவித்தாலும் தீர்வு கிடைக்காது என்பதால் குறைகளைச் சுட்டிக்காட்டுவதையே மக்கள் நிறுத்திக்கொண்டனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த கடந்த 9 ஆண்டுகளில், ரயில்வே பட்ஜெட் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2014-க்கு முன் இது ரூ.600 கோடியாக இருந்தது.

நமது நாட்டில் சிலர் இருக்கிறார்கள். கடந்த 2014-க்குப் பிறகு பிரதமர் மோடியின் நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களங்கம் விளைவிக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதை அப்பட்டமாகவே அவர்கள் செய்கிறார்கள். அவர்களுக்கு உதவ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், தற்போது ஒவ்வொரு இந்தியனும் மோடிக்கு பாதுகாப்பு கவசமாக மாறி இருக்கிறார்கள்'' என்று பிரதமர் மோடி பேசினார்.

Trending News

Latest News

You May Like