ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்பு..!!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமைப் பயணம் ஹரியாணாவில் 107வது நாளை எட்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடர்ந்து ஹரியாணாவில் நேற்று 2வது நாளாக நடைப்பயணம் நடைபெற்றது. இதற்கு முன்பு தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒற்றுமை நடைப்பயணம் நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் நடைப்பயணத்தில் பல்வேறு அரசியல் கூட்டணி கட்சியினர் பங்கேற்று தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் திமுக எம்.பி. கனிமொழி ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்டார்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள கனிமொழி, ஹரியாணாவில் நடைபெறும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்டேன். இந்தியாவின் பன்மைத்துவத்தை உணர்ந்து அதனை ஒருங்கிணைக்கும் நோக்குடன் நடைபோடும் ராகுல் காந்தியுடன் இந்தப் பயணத்தில் நடந்ததில் மகிழ்ச்சி எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் ராகுல் காந்தியுடனும், கரூர் எம்.பி.ஜோதிமணியோடும் ஒற்றுமைப் பயணத்தில் நடந்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.