ராகுல் காந்தி தகுதி நீக்கம்… மோடிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு!!
ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த 2019இல் பிரச்சாரத்தில், நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இதனையடுத்து குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த வெள்ளியன்று முடிந்தது.
இதையடுத்து நேற்று இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் சூரத் நீதிமன்றம் அனுமதி வழங்கி தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. இந்த தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இந்தியா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
சூரத் நீதிமன்றம் 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட நிலையில், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இந்த தகவல் வெளியானதும் பல்வேறு தரப்பினர் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in