முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்..!
உடல்நலக் குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதா தளம் கட்சியின் தலைவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75.
பீகாரிலிருந்து மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தோ்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவ், ஜனதா தளத்திலிருந்து வெளியேறி 1997-ல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினாா். பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் (1999-2004) பல்வேறு துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார்.
பின்னர், ஐக்கிய ஜனதா தளத்திலிலிருந்து விலகி, லோக் தந்த்ரிக் ஜனதா தளம் என்ற கட்சியை 2018-ல் தொடங்கினார். அக்கட்சியை 2022-ல் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்தார்.
இந்த சூழலில், முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன. 12-ம் தேதி) இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், மகனும், மகளும் உள்ளனர்.
சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “சரத் யாதவ் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டு பொது வாழ்வில், எம்பி மற்றும் அமைச்சர் என தனித்து விளங்கினார். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எங்களின் தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.