முன்னாள் எம்.பி. மகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!!
முன்னாள் எம்.பி அத்திக் அகமதுவின் மகனை காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ ராஜூ பால் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞர் உமேஷ் பால்.
இவர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி பிரயாக்ராஜ் என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முன்னாள் எம்.பி., அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதில் அத்திக் அகமது ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது, குலாம் ஆகியோரை கைது செய்ய அதிரடிப்படை போலீஸார் சென்றனர்.
அப்போது, காவல் துறையினர் மீது ஆசாத் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து நடந்த சண்டையில் ஆசாத் அகமது உள்ளிட்ட இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in