மின்சாரம் பாய்ந்து மின் வாரிய ஊழியர் பலி!
நெல்லை மாநகர் கோட்டையடி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(30).இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (பிப்-21) கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் மின்கம்பத்தில் ஏறி மின்பாதையை சீரமைக்கும் பணியில் மணிகண்டன் ஈடுபட்டுள்ளார். நேற்று அந்த பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்தது.இதில் அவர் மின் கம்பத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கங்கைகொண்டான் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், மின்கம்பத்தில் தொங்கிய மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மணிகண்டன் இறந்த தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நெல்லை அரசு மருத்துவமனை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மணிகண்டனின் இறப்புக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டினர். இதனை அடுத்து, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.