போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவர் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தார் - செந்தில் பாலாஜி பரபர ட்வீட்..!!
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையே கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கடும் மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.
விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது.
மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கமாக, பாஜகவை போட்டோஷாப் கட்சி என திமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பார்க்கும்போது அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியிருப்பது, பாஜக தமிழக தலைவர் அண்ணாமாலையை தான் என யூகிக்கப்படுகிறது.