1. Home
  2. தமிழ்நாடு

பொருள் வாங்காதவர்களுக்கு 'கௌரவம்': கூட்டுறவுத்துறை செயலர் தகவல்..!

பொருள் வாங்காதவர்களுக்கு 'கௌரவம்': கூட்டுறவுத்துறை செயலர் தகவல்..!

"குடும்ப அட்டை வைத்திருந்து பொருட்கள் வாங்காத நபர்கள் 'கௌரவ ரேஷன் கார்டு' பெற்றுக் கொள்ளலாம்" என கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் திருச்சி அண்ணா நகர் கூட்டுறவு வங்கியில், உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

பொருள் வாங்காதவர்களுக்கு 'கௌரவம்': கூட்டுறவுத்துறை செயலர் தகவல்..!

தொடர்ந்து, கல்லுக்குழி நியாய விலைக்கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர், டி.வி.எஸ். டோல்கேட் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பொது சுகாதார திட்டத்தின் கீழ் 'நம்ம பகுதி; நம்ம ரேஷன் கடை' என்ற திட்டத்தின் படி ரேஷன் கடைகளை மக்கள் விரும்பும் இடமாக மாற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 75 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. மேலும் புதிதாக கட்டக்கூடிய ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகள் வரும் வசதி, வயதானவர்கள் உட்கார வசதி ஏற்படுத்தப்படும்.

இங்கு சிவில் சப்ளை சிஐடிக்கு என தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அரிசி கடத்தல் தடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் கூட 120 மெட்ரிக் டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் 100 மெட்ரிக் டன் அரிசி பிடித்துள்ளோம். இதில் முக்கிய கடத்தல் புள்ளியான சக்கரவர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ரேஷன் அரிசி கடத்தல் புள்ளிகள் 111 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திற்கு இணையான கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் கடந்த ஓராண்டு காலத்தில் 11 ஆயிரத்து 8 அரிசி கடத்தல் வழக்குகளில், 11,121 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2008 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். 3,997 காலிப்பணியிடங்களை மிக விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் கார்டுகள் ரத்து செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. பொருள் தேவையில்லாதவர்கள் 'கௌரவ ரேஷன் கார்டு' பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டு நாட்கள் டெல்டா மாவட்டங்களில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகளை அறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like