1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் பயணம் செல்வோருக்கு குட் நியூஸ்: அரசு பஸ்களில் முன்பதிவு தொடங்கியது..!

பொங்கல் பயணம் செல்வோருக்கு குட் நியூஸ்: அரசு பஸ்களில் முன்பதிவு தொடங்கியது..!

வரும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், வரும் ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகை, 15-ம் தேதி தைப் பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி உழவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்போர் பெரும்பாலும் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.


தமிழகத்தில், 300 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சொகுசு மற்றும் 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில், பயணிப்பதற்கு 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதன்படி, பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களுக்கு முன்பதிவு செய்யலாம். தற்போது, பொங்கலுக்கு செல்ல சிலர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.


பண்டிகை நெருங்கும்போது முன்பதிவு அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு போல, இந்த ஆண்டும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளோம். இதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும். ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like