பொங்கல் தொகுப்பை 12-ம் தேதிக்குள் வாங்க முடியாதவர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!
2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தமிழக அரசால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன்கள் தற்போது வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கான டோக்கன் கடந்த 3-ம் தேதி முதல் வீடுவீடாகச் சென்று ஊழியர்கள் டோக்கன்களை வழங்கி வந்தனர். நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்கி வந்தனர்.நேற்றுடன் பொங்கல் டோக்கன் கொடுக்கும் பணி நிறைவடைந்தது
இந்நிலையில், இன்று 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைக்கிறார். அதன்பின் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வரும் 12-ம் தேதி வரை கொடுக்கப்பட உள்ளது. இந்த குறிப்பிட்ட தேதிகளில் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஜனவரி 15 ஆம் நாள் பொங்கல் பண்டிகையை அடுத்து ஜனவரி 16 ஆம் நாள் பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.