பெரும் சோகம்..!! காலி சிலிண்டரை மாற்ற உதவிக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர் தீ விபத்தில் பலி..!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காரக்கொரை கிராமத்தில் வசித்து வருபவர் கோபால். இவரது மனைவி கண்ணம்மாள் (58). கோபால் அங்குள்ள வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்களது ஊரில் பண்டிகை என்று கூறப்படுகிறது. இதற்காக கண்ணம்மாள் இன்று வீட்டில் காலையிலேயே சமையலில் ஈடுபட்டார். அப்போது கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது எரியவில்லை. இதனால் என்ன கோளாறு என்று பார்த்தார்.
அப்போது கியாஸ் சிலிண்டர் காலியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரை எடுத்து மாட்ட முடிவு செய்தார். இதற்காக தனது வீட்டின் அருகே வசித்தும் வரும் கியாஸ் நிறுவனத்தில் கிளர்க்காக பணியாற்றி வரும் நடராஜ் (53) என்பவரை அழைத்தார். அவரும் கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்று சிலிண்டரை மாற்றி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. மேலும் வீடு முழுவதும் கியாஸ் புகை பரவி அந்த பகுதியை புகை மண்டலமாக காட்சி அளித்தது. வீட்டிற்குள் கியாஸ் பரவியதும் கோபாலும், கண்ணம்மாளும் வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்று இருந்து கொண்டனர். நடராஜூம் வீட்டின் அறைக்குள் சென்று விட்டார். இதற்கிடையே கண்ணம்மாளின் வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஓடி சென்று பார்த்தனர். மேலும் இதுகுறித்து அருவங்காடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து வீட்டிற்குள் சென்று உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் நடராஜ், கண்ணம்மாள் ஆகியோர் மயங்கிய நிலையில் இருந்தனர். உடனடியாக போலீசார் அவர்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நட்ராஜ் உயிரிழந்தார்.
கண்ணம்மாள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அருவங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் கசிவு ஏற்பட்டு, கியாஸ் நிறுவன கிளர்க் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.