பெண் ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அளித்த தெலுங்கானா அரசு..!! ஏன் தெரியுமா ?
சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது . இது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்திற்கான தற்போதைய போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறது.
இதனையொட்டி, பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் இன்று (மார்ச் 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டி இல்லா வங்கி கடனுதவிகளை நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் வழங்க உள்ளார்.
இந்த நிலையில் பெண்களுக்காக கொண்டாடப்படும் அந்த ஒரு தினத்திலும் கூட விடுமுறை இல்லை என்று இருந்த குறையை தெலுங்கானா அரசு முன்வந்து நீக்கியிருப்பது பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.