பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை..!
ஆயத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலான மக்கள் வணிக நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பூஜைகள் செய்து, பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பல வேளைகளில், சாலைகளின் நடுவே பூசணிக்காய்களை உடைத்துவிட்டு அப்படியே விட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதில், சாலையில் விழும் வாகன ஓட்டிகள் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதும் ஆபத்தும் உள்ளது.
இதுபோன்றவற்றால், ஒவ்வொரு ஆண்டும் வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வருகின்றனர். இதுபோன்ற விபத்துகளை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, பொதுமக்கள் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் தேங்காய், பூசணிக்காய்களை உடைக்க வேண்டாம். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பாதுகாப்பான முறையில் தங்கள் பூஜைகளை செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.