1. Home
  2. தமிழ்நாடு

பிரித்தாளுவது தான் உங்கள் கட்சிக்கு மிகப் பிடித்த கொள்கையா திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே?

1

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரித்தாளுவது தான் உங்கள் கட்சிக்கு மிகப் பிடித்த கொள்கையா திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே? இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒதுக்கிவிட்டு தென்னிந்திய மாநிலங்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு பிரிவினைவாத பரிசினை எவ்வித சலனமுமின்றி சிரித்தபடியே பெற்றுக்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் எண்ணவோட்டம் என்னவாக இருக்கும்? மொத்த இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவை மட்டும் பிரித்தெடுப்பதை இப்படி வெளிப்படையாக ஊக்குவிப்பதற்குத் தான், மூத்த தலைவர்களை விடுத்து வாரிசு அடிப்படையில் உங்களுக்கு துணை முதல்வர் பதவி தூக்கிக் கொடுக்கப்பட்டதா? இதுபோன்ற பிரிவினைவாத கருத்துக்களை பொதுமேடையில் பரப்புவதற்குத் தான் உங்கள் தந்தை உங்களுக்கு 100/100 மதிப்பெண்கள் வழங்கி மகிழ்ந்தாரா?

“சனாதனத்தை ஒழிப்பேன்” என்று இந்துக்களின் மனதை நோகடிப்பது, திராவிட நாடு என்ற பிரிவினையைப் புகுத்தி இந்தியர்களின் ஒற்றுமையைக் குலைப்பது இதுதான் உங்கள் திராவிடம் உங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடமா? பலதரப்பட்ட மக்கள் ஒன்றுகூடி வசிக்கும் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்து கொண்டு இதுபோன்ற பிரித்தாளும் கருத்துக்கு நேரடியாகவே ஆதரவளிக்கும் உங்களின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இமயம் முதல் குமரி வரை இது ஒரே தேசம், நாம் அனைவரும் சமம் என்ற எண்ணம் இந்திய மக்கள் மனதில் ஓங்கி ஒலிக்கும் வரை உங்கள் பிரித்தாளும் எண்ணம் சிறிதும் ஈடேறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வானதி தனது பதிவில் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டுவிட்டு பாடியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட ஒரு விழாவில் இந்தியா மேப்பில் இருந்து மற்ற மாநிலங்களை பிரித்துவிட்டு திராவிட நாடுகள் கொண்ட பகுதியை மட்டும் உதயநிதிக்கு, அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கவுதம சிகாமணியும் கொடுத்தனர். இதற்குத்தான் வானதி கொந்தளித்து ட்வீட் போட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like