பிரபல நடிகர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்..!
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறிய வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்தில் ஆஜரானார்.
பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, 'லைகர்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'லைகர்' திரைப்படம் சுமார் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகவும், இப்படத்திற்கு சந்தேகத்திற்குரிய வகையில் முதலீடு செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்தார்.
இதையடுத்து, விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகநாத், தயாரிப்பாளர் சார்மி கவுர் ஆகியோர் மீது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) மீறியதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியது.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம், அந்நியச் செலாவணி மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.