பியூட்டி பார்லரில் பலான தொழில்.. புதுச்சேரியில் கணவன் - மனைவி கைது..!
புதுச்சேரியில், அழகு நிலையம் மற்றும் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் விபச்சார தொழில் நடத்திய கணவன் - மனைவியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை 'குறி' வைத்து மசாஜ் சென்டர், அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரத்தொழில் கொடி கட்டிப் பறக்கிறது. இது தொடர்பாக போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி அரவிந்தர் வீதியில் அழகு நிலையம் மற்றும் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் விபச்சார தொழில் நடப்பதாக பெரியகடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட அழகு நிலையத்துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்த 4 பெண்களை போலீசார் மீட்டனர். மேலும், அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக அழகு நிலைய உரிமையாளரான குயவர்பாளையத்தை சேர்ந்த ஆனந்தி (35), அவரது கணவர் பாலா என்ற பஞ்சேஸ்வரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.