பாரம்பரிய முறைப்படி நடந்த முகேஷ் அம்பானியின் மகன் நிச்சயதார்த்தம்..!
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இவரது மனைவி நீதா அம்பானி. இந்த தம்பதியின் 3வது மகன் ஆனந்த் அம்பானி.
இவர், அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர். ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ பிளாட் பார்ம்கள் மற்றும் ரீடெயில் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராக இருந்தவர், தற்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார்.
அதேபோல், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் - ஷைலாவின் மகளான ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். ஆனந்த் மற்றும் ராதிகா இடையே, சில ஆண்டுகளாக அறிமுகம் இருந்துள்ளது.
இந்த நிலையில், பெற்றோரின் அனுமதியோடு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ராஜஸ்தானின் நாத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தத்தில், இருவரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, காலை கோவிலுக்கு வந்த ஆனந்த் மற்றும் ராதிகா ஆகியோர் கோயிலில் வழிபாடு நடத்தியதுடன், அங்கு நடந்த சிறப்பு பூஜையிலும் பங்கேற்றனர்.