பாரதிராஜா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி.. மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்..!
உடல்நலம் தேறி சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அஜீரணக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் சளி போன்ற பிரச்சனை இருப்பதாக தெரிவித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அந்த மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதும், உடல்நிலையில் போதிய அளவு முன்னேற்றம் இல்லாத காரணத்தால் மேல்சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு கொடுக்கப்பட்ட உயர்தர சிகிச்சைகள் மூலம் பாரதிராஜா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சுமார் 10 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பாரதிராஜா பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர்.
இந்நிலையில், பாரதிராஜாவுக்கு மீண்டும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல் நிலையை சோதித்துப் பார்த்ததில், நீர்ச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பாரதிராஜா நலமுடன் இருப்பதாக மருத்துவமனை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர்தான் உடல்நலம் தேறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.