பா.ஜ.க. பூஜ்யமாக வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் : மம்தா பானர்ஜி..!!
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை நேற்று(ஏப்.24) கொல்கத்தாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்தார்.
2024 தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "பா.ஜ.க.வை எதிர்க்கும் மெகா கூட்டணிக்கான கட்சிகள் ஒருங்கிணைப்பில் எனக்கு எவ்வித ஈகோவும் இல்லை.வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் மக்களுக்கும் பா.ஜ.க.வுக்கும் எதிரானதாக மட்டுமே இருக்கப் போகிறது. நான் ஏற்கெனவே சொல்லியதுபோல் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் தேர்தல் போருக்காக ஒன்றிணைவதில் எந்த எதிர்ப்பும் இல்லை.
நிதிஷ் குமாரிடம் நான் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளேன். ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கம் பீகாரில் இருந்துதான் ஆரம்பித்தது. அதனால் நாம் பீகாரில் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி அங்கே முடிவு செய்ய வேண்டும். அதற்கும் முன்னதாக நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை வலிமையாகக் கடத்த வேண்டும். எனக்கு பா.ஜ.க.வை ஜீரோவாக்க வேண்டும். அவர்கள் இப்போது ஊடக துணையோடு பெரிய ஹீரோவாக உலாவருகிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ் குமார் நேற்று முதலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். பின்னர் அவர் மாலை லக்னோ சென்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சமீப காலமாகவே காங்கிரஸ் கட்சியுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இணக்கம் காட்டாத நிலையில் எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கூட நிதிஷ் குமார் சந்தித்தார். ஆம் ஆத்மி காங்கிரஸின் மிகப்பெரிய விமர்சகராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதிஷ் குமாருடைய இந்த முயற்சியை ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ’நிதிஷ் ஃபார்முலா’ என்று கூறிவருகின்றனர். இந்நிலையில், ”எனக்கு எந்த ஈகோவும் இல்லை; பா.ஜ.க. பூஜ்யமாக வேண்டும்” என்று மம்தா பானர்ஜி கூறியிருப்பது மெகா கூட்டணிக்கு ஒரு நல்லதொரு சமிக்ஞை என்று கூறப்படுகிறது.