1. Home
  2. தமிழ்நாடு

பாஜக கீழ்த்தரமாக இறங்கும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

பாஜக கீழ்த்தரமாக இறங்கும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எந்த கீழ்த்தரமான செயலுக்கும் பாஜகவினர் செல்வார்கள் என, திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; "அடுத்து நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கீழ்த்தரமான செயலுக்கும், பாஜகவினர் செல்வார்கள். அதை மறந்து விடாதீர்கள்.


தங்களது சாதனைகளை சொல்வதற்கு எதுவும் இல்லாத காரணத்தால் நம்மைப் பற்றி அவதூறுகள் மூலமாக பாஜக அரசியல் நடத்தப் பார்க்கிறது. மதத்தை, ஆன்மீக உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்தப் பார்க்கிறது. அரசியலையும், ஆன்மீகத்தையும் எப்போதும் இணைக்காத மக்கள் தமிழ்நாட்டு மக்கள் என்பதால் தமிழ்நாட்டில் பாஜக மூச்சுமுட்டி திணறிக் கொண்டிருக்கிறது.

அதிமுகவின் கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பாஜக குளிர்காய பார்க்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கலகலத்து கிடக்கிறது. உறுதியான, வலிமையான தலைமை அந்த கட்சிக்கு அமையாத காரணத்தினால் நான்கு பிரிவுகளாக கலகலத்து கிடக்கிறது. தி.மு.க.வை எதிர்ப்பதை தவிர வேறு எந்த கொள்கையும் அ.தி.மு.க.வுக்கு கிடையாது. அதனால் தான் இன்று உணர்ச்சி இல்லாமல் கிடக்கிறது.


எந்த கட்சியாக இருந்தாலும் தகுதியான தலைமையும் வலிமையான கொள்கையும் இருந்தால் மட்டும் தான் வெல்ல முடியும். அதற்கு எடுத்துக் காட்டாக தி.மு.க. இன்று திகழ்ந்து கொண்டிருக்கிறது. சாதனையாக எதையும் சொல்ல முடியாத பாஜகவும், சரிந்து சிதைந்து கிடக்கும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பொய்களை கட்டவிழ்ந்து விடுவார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதை இப்போதே தொடங்குங்கள். இதற்கான நடைமுறைகள், வழிமுறைகள் தலைமை கழகத்தின் சார்பில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த பூத் கமிட்டிக்கு உள்ள அனைத்து உறுப்பினர்களும், அனைத்து தரப்பினரும் இடம் பெறக்கூடிய வகையில் அனைவரையும் அரவணைத்து நியமனம் செய்யுங்கள். அடுத்த 2 மாதத்திற்குள் இந்த பணியை நீங்கள் முழுமையாக முடித்திருக்க வேண்டும்.


கட்சித் தேர்தல் முடிந்து விட்டது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். உதயசூரியனால் ஒளி பெற்றவர்கள். அண்ணாவின் தம்பிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் என்ற ஒற்றுமை உணர்வோடு இனமான உணர்வோடு நாம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like