நேரடி காட்சிகள்!! வீட்டின் மொட்டை மாடியில் விமானம் மோதல்.. இருவர் படுகாயம்..!!
ஜார்க்கண்ட் தன்பாத்தில் உள்ள பர்வாடா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த கிளைடர் வகை விமானம், 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியதில் விமானி மற்றும் 14 வயது பயணி ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும், உரிய விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்தின் காட்சிகள், வீட்டின் கான்கிரீட் தூணால் அந்த விமானம் அடித்து நொறுக்கப்பட்டதைக் காட்டுகிறது. விமானி மற்றும் பயணி அமர்ந்திருக்கும் பகுதி தூணுக்கு இடையில் மோதி சேதமடைந்துள்ளது. மேலும், விமானத்தில் இருந்த கேமராவில், விபத்து பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்த வீட்டின் உரிமையாளரான நிலேஷ் குமார் கூறுகையில், தனது குடும்பத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த அவரது இரண்டு குழந்தைகளும் மயிரிழையில் உயிர்தப்பினர் என்றும் கூறினார்.
காயமடைந்த பயணி பாட்னாவைச் சேர்ந்தவர். அவர் தன்பாத் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து, விமானத்தில் இருந்து நகரத்தைப் பார்க்க கிளைடர் விமான சவாரி செய்ய முடிவு செய்தார். இந்த சேவை தனியார் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்த கிளைடர் சேவையில் விமானி மற்றும் ஒரு பயணி என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
தன்பாத் நகர மக்கள் பொழுதுபோக்கிற்காக காற்றில் இருந்து நகரத்தை பார்த்து மகிழும் வகையில் இந்த கிளைடர் சேவை தொடங்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, நகரின் வான்வழிப் பயணம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.