நாளை கர்நாடகா முதல்வர் பதவியேற்பு..?
கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் ஏற்பட்ட போட்டி வெளிப்படையாகவே வெடித்தது. சிவகுமாரின் ஆதரவாளர்கள் பெங்களூருவில் முக்கிய இடங்களில் 'அடுத்த முதல்வர் டி.கே.சிவகுமார்' என நேற்று பேனர் வைத்தனர். அவரது வீடு மற்றும் காங்கிரஸ் அலுவலகம் முன்பாக குவிந்து, சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் புதிய கர்நாடக அமைச்சரவை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை கர்நாடக முதலமைச்சர் பதவியேற்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஆனால், முதல்வர் யார் என்பதில் இன்னும் தெளிவு இல்லை. ஒருபுறம் சித்தராமையாவும், மற்றொருபுறம் டி.கே. சிவகுமாரும் முதலமைச்சராக வேண்டும் என ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.