1. Home
  2. தமிழ்நாடு

நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

1

நாளந்தா பல்கலைக் கழகம்  பீகார் மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில்  ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் (415-455) நிறுவப்பட்ட பல்கலைக் கழகம் ஆகும். 

இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும். யுவான் சுவாங் இப்பல்கலைக் கழகம் குறித்து தனது பயண நூலில் விரிவாக குறித்துள்ளார்.  அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 10,000 மாணவர்களும் 1,500 ஆசிரியர்களும் இருந்துள்ளனர்.  

பின்னர், 1,197-ம் ஆண்டு டெல்லி சுல்தானின் படைத்தலைவர் பக்தியார் கில்ஜியின் படைவீரர்களால் நாளந்தா பல்கலைக்கழகம் முற்றாக அழிக்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. அதன் பின்னர், 2007-ம் ஆண்டு நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 

அதன்பின்னர், புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று 2010-ம் ஆண்டு முதல் நாளந்தா பல்கலைக்கழகத்தில் மீண்டும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளந்தா பல்கலைக் கழகத்தில் புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளது. 

இந்த புதிய வளாகம் நாளந்தாவின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த புதிய வளாகத்திற்கு உள்ளே சோலார் மின் உற்பத்தி, குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு பசுமை வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பீகார் கவர்னர் ராஜேந்திர வி.அர்லேகார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அதோடு நாளந்தாவின் பழங்கால இடிபாடுகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். பழங்கால நாளந்தா பல்கலைக் கழகத்தின் இடிபாடுகள் கடந்த 2016-ம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காஞ்சி கடிகை பல்கலைக்கழகம்  நாளந்தா போலவே தமிழகத்தின் காஞ்சீபுரத்தில் காஞ்சி கடிகை என்ற பெயரில் புகழ்பெற்ற  பல்கலைக் கழகம் இருந்ததாக வரலாற்று ஆவணங்களில் கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like