நாம் வேண்டிய வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
நாம் வணங்கும் கடவுளிடம் கேட்டால் கேட்டது கிடைக்கும் என்று நம் பெற்றோர்கள் சொல்வதை கேட்டு இருப்போம்.. ஆனால் எப்படி கேட்க வேண்டும் என்பது தெரிந்தால் நிச்சயம் கேட்டது கிடைக்கும்.
அதை உணர்த்தும் வகையில் உள்ள கதை ஒன்றை பார்க்கலாம்.
செல்வமும் செழிப்பும் மிக்க பூஞ்சோலை கிராமம் ஒன்று இருந்தது. கிராமத்தில் வறுமையால் வாடியவர்கள் யாருமே இல்லை என்னும் அளவுக்கு எல்லோரும் செல்வந்தர்களாக இருந்தார்கள். யாருக்கும் எவ்வித தேவையும் இல்லாத நிலையில் நாளடைவில் மக்கள் செருக்குடன் இருந்தார்கள். கர்வமும் செருக்கும் இருந்த நிலையில் இறைவனை மறந்துவிட்டார்கள். இறைவனை மறந்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டாமா.இயற்கை தன் ஆட்டத்தை தொடங்கியது.
மழையில்லாமல் மக்கள் தவித்தனர். மழையின்றி பயிர்களும் அதை தொடர்ந்து மக்களும் வாடினர். பச்சை பசேலென்ற கிராமம் காய்ந்த சருகாக மாறியது. மக்களிடம் இருந்த செல்வம் கரைய தொடங்கியது.மக்களுக்கு தங்களது தவறு புரிய ஆரம்பித்தது. ஊர்க்கூடி மக்கள் பேசினார்கள். அப்போது அவ்வழியாக வந்த சாமியார் ஒருவரிடம் தங்கள் குறையை கூறினார்கள்.
இதுவரை கிராமத்து தேவதைக்கும், அய்யனாருக்கும் பூஜை செய்யாதது தான் தெய்வ குற்றம் என்று கூறிய அவர் திருவிழா நடத்த நாள் குறித்து கொடுத்தார். அப்படியே யாக பூஜை நடத்தினால் அப்போதே மழைவரும் என்றார். மக்கள் திருவிழாவுக்கு நாள் குறித்தார்கள். மழை வேண்டியாக பூஜை நடத்தவும் முன்வந்தார்கள்.
பக்தியுடன் விழா கொண்டாடிய மக்கள் யாக பூஜைக்கு தயாரானார்கள். ஆனால் மழை வருமா, வராதா என்ற கேள்வி அனைவர் மனத்திலும் இருந்தது. கண்களிலும் தெரிந்தது. யாக பூஜை முடிந்தவுடன் மழை வரும் என்று சாமியார் சொன்னதாக மக்கள் கூடி கூடி பேசினார்கள். யாக பூஜை களை கட்டியது மக்கள் சோர்ந்த முகத்துடன் இருந்தார்கள். அப்போது அங்கு வந்த சாமியார் கையில் குடையுடன் வ்ந்திருந்தார். மக்கள் அவரை பார்த்து சிரித்தார்கள்.
காய்ந்து கிடக்கும் பூமியில் மழை எப்படி வரும் என்று எண்ணி நகைத்தார்கள்.
அவர் எதுவும் பேசாமல் புன்னகை புரிந்தபடி அமர்ந்திருந்தார். யாக பூஜை முடியும் தருணம் மழை அசுர வேகத்தில் வந்தது. அதுவரையில்லாத மழை மொத்தமாக பெய்வது போல பேய் மழை பொழிந்தது. மக்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மகிழ்ச்சியும் அழுகையும் சேர்ந்து பொங்கியது. மழை வரும் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று மக்கள் சாமியாரிடம் கேட்டனர். மழைக்காய யாக பூஜை செய்தீர்கள். உங்கள் வேண்டுதல் உண்மை என்றால் மழை வரத்தானே செய்யும். நம்பிக்கை இல்லாமலா பூஜை செய்தீர்கள் என்றார். மக்கள் தங்கள் தவறை உணர்ந்து தலை குனிந்தனர்.
இறைவன் மீது வேண்டுதல் வைப்பதை காட்டிலும் இறைவன் செய்வார் என்று நம்புவது தான் இறைவழிபாடு. என் நம்பிக்கையை இறைவன் காப்பாற்றிவிட்டார் என்றார் சாமியார். இப்போது புரிந்ததா? இறைவனிடம் எப்படி கேட்க வேண்டும் என்று!