நமது திறமை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் - பிரதமர்
நமது திறமை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17-வது வெளிநாடு வாழ் இந்திய தின விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்த உலகமே ஒரே நாடுதான் என்றார்.
அனைத்து மக்களும் நம் சகோதரர்கள்தான் என்று கூறிய அவர், இது நம் முன்னோர்களால் கலாச்சார ரீதியில் வடிவமைக்கப்பட்டது என்று தெரிவித்தார். இந்த மாநாடு நாட்டின் இதயம் என்று அழைக்கப்படும் நிலத்தில் நடைபெறுகிறது என்றார். ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியரும் இந்தியாவின் தூதர் என்றே அழைப்பேன் என்று பிரதமர் கூறினார்.
இந்தியாவின் குறு,சிறு தொழில்கள், கைவினை பொருட்கள் ஆகியவற்றின் தூதர்கள் அவர்கள் என்றார். நமது திறமை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் என்று கூறிய அவர், இந்தியாவின் எதிர்காலத்தை நோக்கி உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன என்று பெருமிதம் அடைந்தார்.
உலக டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40% இந்தியாவில் நடப்பதை கண்டு மற்ற நாடுகள் வியப்படைகின்றன என்றார். இந்தியாவின் முன்னேற்றம் பற்றி ஒவ்வோரு வெளிநாடு இந்தியர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பை ஆராய்ந்தால் இந்தியா எவ்வளவு வலிமையான மற்றும் திறமையான நாடு என்பது புரியும் என்றார்.
newstm.in