நடுரோட்டில் படுத்து ரகளை செய்த பெண்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோவை சாலை பகுதியில் காந்தி சிலை அருகே திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து அப்பகுதிக்கு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ஏன்? என பார்த்த போது, உச்சி வெயிலில் தார் சாலை நடுவே பெண் ஒருவர் கால்களை ஆட்டியபடி ஹாயாக படுத்துக் கொண்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
தற்கொலை முயற்சியா? குடும்பத் தகராறா? எதனால் விரத்தியடைந்து இப்படி சாலைநடுவே படுத்திருக்கிறார் என குழம்பிய போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதுதான் அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. திருப்பூர் பகுதியைச் சேர்ந்த அந்த பெண், அருகில் இருந்த டாஸ்மாக்கில் குடித்து விட்டுத்தான் இந்த ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணிடம் நீண்ட நேரம் பேசியும், நகரமாட்டேன் என பிடிவாதம் பிடித்தவர், எத்தனை பேர் வந்தாலும் பேசி சமாளிப்பேன் என அனைவருக்கு டஃப் கொடுத்து ஆவேசமாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தவராய் அங்கிருந்து நகன்றவர் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே சென்றுள்ளார். அங்கு சிக்னலில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து போலீசாருக்கு சிக்கல் ஆரம்பித்தது.
ஓடிச் சென்று ஒற்றைக் கையில் பேருந்தை நிறுத்தியவர் என்னை மீறி செல்லும் அளவுக்கு துணிச்சல் உள்ளதா? என்ற தோரணையில் போலீசாருக்கு சவால் விடுத்தார். அவ்வழியாக சென்ற யாரும் அவரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், போக்குவரத்தை தானே சீர் செய்வது போல் கற்பனைசெய்து கொண்டு அங்குமிங்கும் ஓடியபடி அட்டகாசத்தில் ஈடுபட்டார்.
மதுபோதையில் பெண் செய்த இந்த அலப்பறையை பார்த்து கரிசனம் கொண்ட காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், ஒருவழியாகப் பெண்ணை பிடித்து சமாதானப்படுத்தி சாலையோரம் உட்கார வைத்தார். அவரிடம் விசாரித்த போது, திருப்பூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண், கணவரை இழந்த சோகத்தில் குடிபோதையில் இவ்வாறு நடந்து கொண்டது தெரியவந்தது.
அவரிடம் சமாதானமாக பேசிய போலீசார் போதை தெளிந்த பின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். போதை தலைக்கேற உச்சி வெயிலில் பெண் செய்த அட்டகாசத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.