நடிகை சித்ரா மரணத்தில் டிவி பிரபலத்திற்கு தொடர்பு?!
சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் பிரபல விஜே ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக ஹேமந்த் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் ஹேமந்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ஹேமந்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ஹோகித் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் ஹேமந்த் தனது நண்பர் என்றும், சித்ராவிற்கு ஹேமந்த் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறையிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹேமந்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில், தாம் மட்டும் சாட்சியம் அளித்ததாகவும், இதற்காக தன்னை கொலை செய்து விடுவதாக ஹேமந்த் மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
ஹேமந்த் தனது பண பலத்தால் சாட்சியங்களை மிரட்டி வருவதாகவும், அவரை வெளியே சுதந்திரமாக நடமாட விட்டால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார். எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் சித்ரா மரணம் குறித்து ஹேமந்த் மீண்டும் பேசியுள்ளார். சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்து விரைவில் வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார். மெஸ் ஒன்றின் உரிமையாளர் மற்றும் விஜய் டிவி விஜே ஒருவர் சித்ராவுக்கு தொல்லை கொடுத்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
newstm.in