திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன?
2021- ஆம் ஆண்டு மே மாதம் 7- ஆம் தேதி தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர்ந்தது. கொரோனா உச்சத்தில் இருந்த போது, முத்துவேல் ‘கருணாநிதி ஸ்டாலின்’ எனும் நான் என முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், அதேநாளில் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்:
அதன் முதன்மையாக, அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை அறிவித்தார். இதற்காக தமிழகம் முழுவதும் 7,164 சாதாரணப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், நாளொன்றுக்கு 45.51 முறை மகளிர் இலவச பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசின் போக்குவரத்துத்துறைத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மார்ச் மாதம் வரை 260 கோடியே 59 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அதில் 14 லட்சத்துக்கு 91 முறை திருநங்கைகள் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, இரண்டு ஆண்டுகளில் தமிழக அரசு 2,800 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம்:
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் 1,545 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் 1.48 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக, கடந்த 2022- 2023 ஆம் நிதியாண்டில் 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதால் நடப்பு 2023- 2024 ஆம் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித் திட்டம்:
மாணவிகளின் உயர்கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் தொகை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நான் முதல்வன் திட்டம்:
இந்த திட்டத்திற்காக 698 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பிலும், அறிவிலும், திறமையிலும் மேம்படுத்த ‘நான் முதல்வன்’ திட்டத்தை அரசு அறிவித்திருந்தது. இதற்காக, கடந்த 2022- 2023 ஆம் நிதியாண்டில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.
இல்லம் தேடி கல்வித் திட்டம்:
கொரோனா காலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தி.மு.க. அரசு தொடங்கியது தான் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தன்னார்வலர்கள் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை வகுப்புகள் எடுப்பார்கள். இந்த திட்டத்திற்கு, கடந்த 2021- 2022 ஆம் நிதியாண்டில் ரூபாய் 97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம்:
வீடுகளுக்கே நேரில் சென்று மருத்துவ சேவை வழங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம், கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. மே 3- ஆம் தேதி வரை 1.49 கோடி பேர் இந்த திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டத்திற்காக, இதுவரை 434.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்:
விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்டை அறிமுகப்படுத்தியது தி.மு.க. அரசு. அதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதுவரை சுமார் 4 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள், இந்த திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை இலவச மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின் மூலம் 57 அர்ச்சகர் நியமிக்கப்பட்டு, தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதிய தொகையை ரூபாய் 1,000- லிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 4.39 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது.