தரைதட்டி நின்றது பிரதமர் தொடங்கி வைத்த கப்பல்!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கடந்த 13ஆம் தேதி நதிவழி சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார்.
முதல் முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல் வாரணாசியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி வங்கதேசம் வழியாக 5 மாநிலங்களைக் கடந்து 51 நாட்களில் 3,200 கிமீ பயணம் மேற்கொண்டு அசாமில் இருக்கும் திப்ருகர் துறைமுகத்தை அடைகிறது.
இந்த பயணத்தின் 51 நாட்களில், உலக பாரம்பரியமான இடங்கள், தேசிய பூங்காக்கள், நதி படுகைகள் பிஹாரின் பாட்னா, ஜார்கண்டின் சாஹிப்கஞ்ச், மேற்குவங்கத்தின் கொல்கத்தா, வங்கதேசத்தின் டாக்கா மற்றும் அசாமின் குவாஹாட்டி போன்ற முக்கிய நகரங்கள் என 50 சுற்றுலாத்தலங்களை காணமுடியும்.
இந்நிலையில் பிரதமர் தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியது. பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த போது கப்பல் தரை தட்டி நின்றது. கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
பயணிகள் தொல்லியல் தளமான சிராந்த் சரண் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அனைத்து ஆடம்பர வசதிகளுடன், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், 18 அறைகள் கப்பலில் உள்ளன. இது தவிர, 40 பணியாளர்கள் தங்கும் வசதியும் உள்ளது.
newstm.in