தமிழகத்தில் மீண்டும் அரங்கேறிய அவலம்..! டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு தையல்..!
அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்குத் தையல் போடும் நேரத்தில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் எதிர்பாராதவிதமாக பழுதாகிவிட்டதால் இடைப்பட்ட நேரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.அதுபற்றிய விபரம் வருமாறு:-
மானாமதுரை அருகேயுள்ள கீழபசலை கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். ரெயில்வே ஊழியரான இவரை முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் சிலர் நேற்று இரவு வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி சரிந்தார்.
இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தயாரானார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக மின்தடை ஏற்பட்டது. இதனால் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த பாலமுருகனுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அப்போது டாக்டர்கள் வேறு வழியின்றி செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரின் செல்போன்களில் டார்ச் லைட்டை எரியவிடுமாறு கூறினர். அந்த வெளிச்சத்தில் அரிவாள் வெட்டு காயம் அடைந்த பாலமுருகனுக்கு தலையில் தையல் போடப்பட்டது. இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இன்று வைரலாகி உள்ளது.
அவசர கால சிகிச்சைக்கு கூட ஒரு ஜெனரேட்டர் வசதியோ அல்லது பேட்டரி வசதியோ இல்லாத நிலையில் ரெயில்வே ஊழியருக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.png)