தமிழகத்தில் இன்ப்ளூயன்ஸா வைரஸால் இளைஞர் பலி? அமைச்சர் சொல்வதென்ன ?
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சலால் கர்நாடகா மற்றும் ஹரியாணாவில் தலா ஒருவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் இந்த காய்ச்சலுக்கு 90க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சளி மற்றும் இரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த இளைஞர் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது: பெங்களூருவில் தங்கி பணிபுரிந்த திருச்சி இளைஞருக்கு கோவிட் மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவருடைய மாதிரிகள் மரபணு வரிசை பகுப்பாய்வு மையத்தில் ஆய்வில் உள்ளது. எந்த வகை கோவிட் வைரஸ் அவருக்கு இருந்தது என்பது ஆய்வு முடிவில் தெரிய வரும். அதேவேளையில் அவருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவருக்கு இணைநோய்கள் இருப்பதாகத் தான் தெரிகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்பதை சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையும் உறுதி செய்துள்ளது. இவ்வாறு கூறினார்.