1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசின் திருத்தப்பட்ட விதிகளுக்கு இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்..!!

தமிழக அரசின் திருத்தப்பட்ட விதிகளுக்கு இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்..!!

திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறப்பு உரிமம் பெற்றவர்கள் குறிப்பிடப்பட்ட இடத்தில் பொது நிகழ்ச்சிகளில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதுபானம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சிறப்பு உரிமம் குறித்த அறிவிப்பு கடந்த 2023 மார்ச் மாதம் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையால் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை தற்போது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து குறிப்பிட்ட தொலைவில்தான் அமைக்க வேண்டும் என விதிகள் உள்ளன. இந்நிலையில், திருமணம் போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் என்பதால், இந்த விதிகளை அனுமதித்தால், அது பொதுமக்கள் அமைதியாக வாழும் உரிமையை பாதிக்கும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திருத்த விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும். எனவே, அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம்,"பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை எதிர்த்துதான் வழக்கு தொடர முடியும்" என வாதிட்டார்.

அப்போது பாலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன், "பொது இடங்கள் மட்டுமின்றி, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்கவும் தடை விதிக்க கோரியுள்ளோம். புதிய திருத்தம் தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்தி நீதிபதிகள், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு , விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Trending News

Latest News

You May Like